Reading Time: < 1 minute

கனேடிய மக்கள் பலர், இனி அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதில்லை என முடிவு எடுத்துள்ளார்கள்.

அமெரிக்காவுக்கு அதிக அளவில் சுற்றுலா செல்பவர்களில் முதலிடம் பிடித்துவந்தவர்கள் கனேடியர்கள்.

ஆனால், இனி அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதில்லை என கனேடியர்களில் பலர் முடிவு செய்துள்ளார்கள்.

ட்ரம்ப் கனடா மீது வரிகள் விதிக்கப்போவதாக மிரட்டியதைத் தொடர்ந்து, கனேடியர்கள் அமெரிக்காவைத் தவிர்த்து கனடாவுக்குள்ளேயே பல்வேறு சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவதில் கவனம் செலுத்துமாறு முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ மக்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அவர் கேட்டுக்கொண்ட விடயத்தை மக்கள் பின்பற்றத் துவங்கியுள்ளார்கள்.

அதன்படி, பிப்ரவரியில் அமெரிக்கா சென்று திரும்பிய கனேடியர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 23 சதவிகிதம் குறைந்துள்ளதாக கனடாவின் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் வரிவிதிப்பு அச்சுறுத்தல்களைவிட, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக அவர் மிரட்டிவருவதுதான் தங்களுக்கு கோபத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கனேடிய மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே, எல்லை தாண்டி அமெரிக்காவுக்குச் சென்று தங்கள் பணத்தை அமெரிக்காவில் செலவிடுவதில்லை என பலர் முடிவு செய்துள்ளார்கள்.

இதுபோக, சமீக காலமாக அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வர்களும், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களும் கூட கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களுக்கு சிறையில் அடைக்கப்படுவதாக வெளியாகிவரும் செய்திகள் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் எண்ணத்தை தவிர்க்க கனேடியர்களைத் தூண்டியுள்ளது.

விடயம் என்னவென்றால், 2024ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 20.2 மில்லியன் முறை கனேடியர்கள் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.

ஆக, அவர்களில் 10 சதவிகிதம் பேர் அமெரிக்கா செல்வதைத் தவிர்த்தாலே, அமெரிக்காவுக்கு சுமார் 2 பில்லியன் டொலர்கள் இழப்பும், 14,000 பேர் வேலையிழக்கும் நிலையும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.