Reading Time: < 1 minute

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உடன்படிக்கையின் மூலம் ஏதிலிகள் குறித்த பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏதிலிக் கோரிக்கையாளர் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையில் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் மூலம் குடியேறிகள், ஏதிலிகள் கனடாவிற்குள் பிரதான எல்லைப் பகுதிகள் வழியாக பிரவேசிப்பதனை தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பூரணமாக ஏதிலிகள் எல்லை வழியாக பிரவேசிப்பதனை தடுத்து நிறுத்தப் போவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பான வழிகளில் ஏதிலிகள் கனடாவிற்குள் பிரவேசிப்பதனை முடக்குவதன் மூலம் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் உருவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

மொன்றியல் ஏதிலிகள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல்லாஹ் தாவூத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தீர்மானங்கள் காரணமாக கடந்த காலங்களில் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களையும் ஆட்கடத்தல் கும்பல்களையும் உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உடன்படிக்கையின் பின்னர் கூடுதல் எண்ணிக்கையில் ஏதிலிகள் கனடாவிற்குள் பிரவேசிக்கும் சாத்தியங்கள் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதான வழிகளை முடக்குவதன் மூலம் ஆபத்தான பயணங்களை ஏதிலிகள் மேற்கொள்ள நேரிடலாம் எனவும் உயிர் ஆபத்து ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.