அமெரிக்காவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பழிவாங்கும் வரிப் பட்டியலிலிருந்து மீன் மற்றும் கடல் உணவுப் பொருட்களைக் கனடா கூட்டாட்சி அரசு விலக்கியுள்ளது.
நாட்டின் மீன்பிடி மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கனடா ஆண்டுதோறும் அமெரிக்காவிலிருந்து சுமார் 1 பில்லியன் டொலர் மதிப்பிலான கடல் உணவுகளை இறக்குமதி செய்கிறது.
இதில் 40 சதவீதம் லோப்ஸ்டர் வகை நண்டுகளாகும். கனடாவில் அறுவடை குறைவாக இருக்கும் காலங்களில், அங்குள்ள பதப்படுத்தும் ஆலைகள் அமெரிக்க இறக்குமதியையே சார்ந்து இயங்குகின்றன.
வரி விதிப்பு தொடர்ந்தால் ஆலைகளும், உள்ளூர் மீன்பிடித் தொழிலும் பெரும் நிதிப் பாதிப்பைச் சந்திக்கும் என்பதால் இவ்வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
நோவா ஸ்கோஷியா போன்ற கடலோர மாகாணங்களில் மீன்பிடி மற்றும் கடல் உணவு ஏற்றுமதித் துறை ஆண்டுக்குச் சுமார் 8.5 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டித் தருகிறது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரினால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, கனடிய கடல் உணவுத் துறை தனது ஏற்றுமதியை ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்குப் பல்வகைப்படுத்தி வருகிறது.
வரி நீக்கம் உள்ளூர் தொழில்துறைக்கு நிம்மதி அளித்துள்ள போதிலும், டீசல் மற்றும் தூண்டில் இரையின் விலை இருமடங்கு வரை உயர்ந்துள்ளதால், மீன்பிடித் துறை தொடர்ந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.