Reading Time: < 1 minute

அமெரிக்காவில் சில பகுதிகளில் சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்று அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளது. அத்துடன், சிறுவர்கள் மருத்துவமனையில் சோ்க்கப்படும் வீதம் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவிகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையும் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் சிறுவர்கள் அதிகளவில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படுகின்றமை கனடாவிலும் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குளிர்காலம் நெருங்கி வருவதுடன், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவைப் போன்று கனடாவிலும் சிறுவர்கள் மத்தியில் தொற்று நோய் அதிகரிக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொவிட் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு தீவர அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களில் எண்ணிக்கை தற்போது 1900-க்கும் அதிகமாக உள்ளது. டெல்டா உரு திரிபு வைரஸே சிறுவர்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள கொவிட் -19 மருத்துவமனைகளில் தற்போது அனுமதிக்கப்பட்டவர்களில் 2.4 வீதமானவர்கள் சிறுவர்களாக உள்ளதாக மதீப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கனடாவின் எல்லை நாட்டில் சிறுவர்கள் மத்தியில் தொற்று நோய் பரவில் தீவிரமாகி வருவதை கனேடிய பெற்றோர்களும் மருத்துவர்களும் பதட்டத்துடன் அவதானித்து வருகின்றனர்.

எனினும் அமெரிக்காவின் நிலையை ஒப்பிட்டு கனேடிய பெற்றோர் அதிகம் கவலைப்படத் தேவையில்லை இரு நாடுகளுக்கு இடையிலும் சூழ்நிலைகளில் வேறுபாடுகள் உள்ளன என எட்மண்டனைச் சோ்ந்த தொற்று நோய் நிபுணர் லினோரா சாக்ஸிங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை விட கனடாவில் தடுப்பூசி வீதம் அதிகமாக உள்ளது. தொற்று பரிமாற்ற வீதமும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் தற்போது கனடாவில் மிகக் குறைவாகவே உள்ளது எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.