Reading Time: < 1 minute

“அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்” என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை அமுலுக்குக் கொண்டுவந்தார்.

கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு புதிய வர்த்தக வரியை அமெரிக்கா விதிக்கவில்லை என்றாலும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எக்கு, அலுமினியம் மற்றும் வாகனங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது ‘எமது வாகனங்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் விதித்துள்ள வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, எமது வர்த்தக ஒப்பந்தத்துக்கு இணங்காத அனைத்து அமெரிக்க வாகன உதிரி பாகங்களுக்கும் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.

அதன்மூலம் கிடைக்கும் அனைத்து வருமானங்களும் கனடா வாகன உற்பத்தி தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறைக்காக பயன்படுத்தப்படும்.

ட்ரம்ப் விதித்த வரியைப் போன்று எங்களின் வரி வாகன உதிரி பாகங்களை பாதிக்காது. எங்களின் விநியோகச் சங்கிலியின் நன்மைகள் எங்களுக்குத் தெரியும். கனடாவில் உற்பத்தி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் உதிரி பாக உற்பத்தியாளர்களுக்கு ஆதரவான கட்டமைப்பை கனடா உருவாக்கும்’ இவ்வாறு மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.