அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திடமிருந்து லிபரல் அரசாங்கம் புதிய அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்கிறது.
இதன்படி, நேட்டோ மாநாட்டில் உறுதிப்படுத்தப்பட்டவாறு பாதுகாப்பு செலவீனங்களை கனடா அதிகரிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ரொபேர்ட் ஓ பிரெய்ன், “கனடா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதம் அளவில் இராணுவ வரவு செலவுத் திட்டங்களை ஒதுக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்” எனக் கூறியுள்ளார்
ஹொலிஃபக்ஸ் சர்வதேச பாதுகாப்பு சபையில் நேற்று (சனிக்கிழமையன்று) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், ஈரான் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட உலகின் கவனிக்கத்தக்க நாடுகளின் பட்டியலையும், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நீண்டகால எதிர்ப்பு நாடுகளையும் சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் மிகவும் கடுமையான அச்சுறுத்தல்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வேல்ஸில் கடந்த 2014இல் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் கனடா இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிடுவதாக உறுதிமொழி அளித்தது. இந்நிலையில் அது தொடர்பாக லிபரல் அரசாங்கம் அக்கறைகொள்ளும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.