ஒன்ராறியோவில் அடுத்து 6 மாதங்களில் கட்டாய தடுப்பூசி பாஸ் நடைமுறை, முக கவச கட்டாய நடைமுறை உள்ளிட்ட அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளும் படிப்படியாக நீக்கக்கப்படும் என மாகாண முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.
சடுதியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் கடச்த காலங்களில் தொற்று நோயை ஒழிப்பதற்காக ஒன்ராறியர்கள் செய்த தியாகங்கள் மற்றும் கடின உழைப்புக்கள் வீண் போக அனுமதிக்க முடியாது. எனவே, எச்சரிக்கையான மற்றும் கவனமான அணுகுமுறைகளுடன் அடுத்த 06 மாதங்களில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் படிப்படியாக நீக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தார்.
ஒக்டோபர் – 25 முதல் மாகாணத்தில் உள்ள உள் அரங்குகள் மற்றும் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நுழைவதற்கு அல்லது சேவை பெறுவதற்கான உச்ச திறன் வரம்பு நீக்கப்படும்.
அத்துடன், சில வெளிப்புற நடவடிக்கைகளுக்கான உச்ச திறன் வரம்பு கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.
மேலும் கட்டாய தடுப்பூசி பாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டால் கடைகள், சலூன்கள், அருங்காட்சியகங்கள், கண்காட்சிகள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்க அறிவியல் மையங்கள், தாவரவியல் பூங்காக்கள், திருவிழாக்கள், கடற்கரைகள் மற்றும் இவற்றை ஒத்த இடங்களின் உட்புறப் பகுதிகளில் சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் எனவும் முதல்வர் டக் போர்ட் கூறினார்.
அத்துடன், இறுதி சடங்குகள் அல்லது திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் பங்கேற்பாளர்களுக்கான கட்டுப்பாடுகள் நவம்பர் -15 முதல் நீக்கப்படும்.
அதேபோன்று இரவு களியாட்ட விடுதிகள் உள்ளிட்ட களியாட்ட மையங்களின் கட்டுப்பாடுகளும் படிப்படியாக நீக்கப்படும்.
பெப்ரவரி 7 ஆம் திகதிக்குள் அனைத்து இடங்களிலும் கட்டாய தடுப்பூசி சான்று நடைமுறை நீக்கப்படும். 2022 மார்ச் 28 ஆம் திகதிக்குள் முககவசம் உள்ளிட்ட அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளையும் நீக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.