கனடாவில் கொவிட் 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ள அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடுவதற்குத் தேவையான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
இந்த வாரம் கனடா வரவுள்ள 05 மில்லியன் தடுப்பூசிகளுடன் கனடாவிடம் மொத்தம் 66 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும். இது 12 வயதுக்கு மேற்பட்ட 33.2 மில்லியன் கனேடியர்களுக்குப் போதுமானது.
அனைத்துக் கனேடியர்களுக்கும் போதுமான தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளதால் இனியும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கதற்கான எந்தவித காரணங்களும் இல்லை என நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
தடுப்பூசி பெறத் தகுதியான அனைத்துக் கனேடியர்களுக்கும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முழுமையாகத் தடுப்பூசி போடுவதற்கு கனடிய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை முழுமையாக அடைவதற்குத் தேவையான தடுப்பூசிகள் எங்களிடம் கையிருப்பில் உள்ளன என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
3.6 மில்லியன் பைசர்-பயோஎன்டெக் மற்றும் 1.4 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் இந்த வாரம் வரவுக்கள் 5 மில்லியன் தடுப்பூசிகளில் அடங்குகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கனேடிய அரசாங்கத்தின் தரவுகளின்படி 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கனேடியர்களில் 57.45 வீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். 79.66 வீதமானோர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை, 12 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கான தடுப்பூசிகளைப் போடுவது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பைசர் மற்றும் மொடர்னா நிறுவனங்கள் இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இவ்வாான நிலையில் தடுப்பூசி பெறத் தகுதி பெற்றும் இதுவரை ஒரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாத கனேடியர்கள் குறித்த கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதார மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் உட்பட பல்வேறு காரணங்களைக் கூறி இவ்வாறானவர்கள் தடுப்பூசி பெறத் தயங்கி வருகின்றனர். குறிப்பாக கிராமப் புறங்களில் அதிகளவானவர்கள் தடுப்பூசிகளை தவிர்த்து வருகின்றனர்.
இவ்வாறு தடுப்பூசி பெறாதோரை இலக்குவைத்து கட்டாய தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் ஏதும் அரசிடம் உள்ளதா? என பிரதமர் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் செயற்றிட்டங்களை தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகக் கூறினார். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே சர்வதேச நாடுகளுக்குப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.