அஜாக்ஸ் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக, டூர்ஹம் பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பெய்லீ வீதி தெற்கில் அமைந்துள்ள ரம் டயரீஸ் எனப்படும் உணவகத்திற்கு முன்னாள் மோதலில் ஈடுபட்ட ஆண்களையும் பெண்களையும் கொண்ட குழுக்களையே பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது, துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அந்தப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து பொலிஸார் அங்கு விரைந்த போது, அங்கிருந்து ஒரு குழு சந்தேக நபர்கள் வாகனம் ஒன்றில் புறப்பட்டுச் சென்றதனை அவதானித்துள்ளனர்.
குறித்த அந்த வாகனம் அங்கிருந்து ரொறன்ரோ பின்ஞ் அவனியூ மற்றும் ட்ரிப்ட் வுட் அவனியூபகுதிக்குச் சென்றதாகவும், ஒன்றாறியோ மாகாண பொலிஸாரின் உதவியுடன் பின்தொடர்ந்த ரொறன்ரோ பொலிஸார், குறித்த அந்த காரை மறிக்க முயன்ற போது அது அவர்களிடம் இருந்து தப்பியோடிச் சென்ற வேளையில், ட்ரிப்ட் வுட் கோர்ட் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சுவர் மீது மோதியதாகவும், அதனை அடுத்து வாகனத்தில் இருந்த மூன்று சந்தேக நபர்களும் வாகனத்தில் இருந்து இறங்கி கால்நடையாக தப்பித்துச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான அந்த வாகனத்தை மட்டும் பொலிஸார் கைப்பற்றிய நிலையில், சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இதேவேளை குறித்த அந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து ஏற்கனவே தப்பித்துச் சென்ற மேலும் ஒரு குழு சந்தேக நபர்களையும் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் சந்தேக நபர்களின் அடையாளங்கள் உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தில் 11 வெற்றுத் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த வீதியில் உள்ள பல கட்டிடங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் எவரும் காயமடைந்ததாக இதுவரை முறைப்பாடு இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.