ஹொங்கொங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு கனடாவிலும் இருந்து, ஆதரவுக் கரம் நீட்டப்பட்டுள்ளது.
17ஆவது வார இறுதியாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஆதரவாக ரொறன்ரோ டவுன்ரவுன் பகுதியிலும் திரண்ட ஒரு தொகுதியினர் பேரணி நடத்தியுள்ளனர்.
ஹொங்கொங் போராட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கும் பதாதைகளைத் தாங்கியவாறு ரவுண்ட்ஹவுஸ் பார்க்கிலிருந்து பேரணியை ஆரம்பித்த அவர்கள், சீ.என் டவர் பகுதி ஊடாக நாதன் பிலிப்ஸ் சதுக்கம் வரையில் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
சீனாவின் தேசிய தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) ஹொங்கொங் போராட்டங்களுக்கு ஆதரவாக உலகளாவிய அளவில் சுமார் 60 நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
ஹொங்கொங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத் திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹொங்கொங் போராட்டங்கள் மேற்கொண்ட போராட்டம் வெற்றிக்கண்டுள்ள நிலையில், கடந்த 4 மாதங்களாக போராட்டக்காரர்களின் பிற தேவைகளையும் நிறைவேற்றக் கூறி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.