Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்தியர்களுக்கு பிணை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை கனேடிய அதிகாரிகள் நிராகரித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கட்டாய தடுப்பு உத்தரவுகளின் கீழ் காவலில் உள்ளதாக அவர்கள் தெளிவுபடுத்தினர்.

குறித்த நபர்களை கட்டாய காவலில் வைக்க உத்தரவிட்ட பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம், அடுத்த விசாரணையை பெப்ரவரி 11 இல் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கனேடிய சட்டமா அதிபர் அமைச்சின் மூத்த அதிகாரியான ஆன் சீமோர் கூறியுள்ளார்.

நீதிமன்றம் பிறப்பித்த தடுப்புக்காவல் உத்தரவு விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் இருப்பதை உறுதி செய்கிறது.

கரன் பிரார், அமந்தீப் சிங், கமல்ப்ரீத் சிங் மற்றும் கரன்ப்ரீத் சிங் ஆகிய நான்கு இந்தியர்களும் குறித்த வழக்கில் முதல் நிலை கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஹர்தீப் நிஜ்ஜார், ஒரு முக்கிய காலிஸ்தான் சார்பு தலைவர், 2023 ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை அடுத்து இந்த வழக்கு உலக அளவில் கவனம் பெற்றது.

இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது, அவை “ஆதாரமற்றவை” என்றும் கூறியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.