Reading Time: < 1 minute

கனடாவில் குடியேறியுள்ள ஹரி – மேகன் தம்பதிக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளால் ஏற்படும் செலவுகளை கனேடிய அரசாங்கம் ஏற்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு ஆர்ச்சி என்ற, 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் அரசு குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகுவதாக, ஹரி – மேகன் தம்பதியினர் அறிவித்தனர். இதற்கு பிரித்தானிய மாகாராணி 2ஆம் எலிசபெத் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறினர்.

வன்கூவர் தீவின் விக்டோரியா பகுதியில் வசித்து வரும் அவர்களுக்கு, பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் கனேடிய அரசாங்கம் உள்ளது. எனினும், அதற்கு ஆகும் செலவை, கனடா அரசு ஏற்குமா, இல்லையா என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஹரி – மேகன் தம்பதியின் பாதுகாப்புச் செலவுகளை, கனடா அரசு ஏற்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, மக்கள் மத்தியில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இதில், ஹரி – மேகன் தம்பதிக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளால் ஏற்படும் செலவுகளை, கனடா அரசு ஏற்கக்கூடாது என, 77 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். 19 சதவீத மக்களே பாதுகாப்புச் செலவுகளை அரசு ஏற்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.