கடந்த வார இறுதியில் ஹமில்ட்டன் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், கொலைச் சந்தேக நபர் சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களில் கனடாவிலிருந்து வெளியேறித் தப்பிச் சென்றுள்ள நிலையில், சர்வதேச ரீதியில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஹமில்ட்டன் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
York Boulevardஇல் உள்ள Boulevard Billiardsற்கு வெளியே கடந்த 19ஆம் திகதி அதிகாலை 1:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைந்த வேளையில், அங்கே 29 வயதான ஒப்சா ஜுனேடி மொஹமட் என்பவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதற்ககு முன்னர், குறித்த அந்த நபர் அங்கே வேறு இரண்டு ஆண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக, அதனை நேரில் பார்த்தோர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஹமில்ட்டன் காவல்துறையினர், ஹமில்ட்டனைச் சேர்ந்த இப்ராஹிம் ஈசக் ஹுசேன் என்பவரை முதல்தர கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபராக அடையாளம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை எதியோப்பியா புறப்பட்டுச் சென்ற விமானத்தில் ஏறிவிட்டதனை கனேடிய எல்லைப் பாதுகாவல் துறையினர் மூலம் அறிந்து கொண்டதாகவும், அந்த வேளையில் குறித்த அந்த நபர் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் அவரை தேடும் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்படுவதாகவும், அவரைக் கைது செய்து ஒன்ராறியோவுக்குக் கொண்டுவந்து நீதியின் முன் நிறுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் அவர்கள் விபரம் வெளியிட்டுள்ளனர்.