சில வருடங்களுக்கு முன்னர் எனது தாயார் தனது இறுதிக்காலத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருந்தார் . அப்போது யாழ்ப்பாணத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான வைத்திய நிபுணராக ஒரே ஒருவரே கடமையாற்றிக்கொண்டிருந்தார். அவரே எனது தாயாரையும் கவனித்துவந்தார். ஒருமுறை அம்மாவை அழைத்துக்கொண்டு வழமையான Check up இற்காக அவரிடம் சென்றிருந்தேன்.
அவுஸ்திரேலியாவிலே மருத்துவத்துறையில் அவரது நிபுணத்துவ மேற்படிப்பை முடித்தவர் அந்த மருத்துவர். பொதுவாக மேற்படிப்பிற்காக மேற்குலகு செல்லும் மருத்துவர்கள் படித்து முடித்ததும் அந்தநாடுகளில் விண்ணப்பித்து வேலை எடுத்துக்கொண்டு தங்கிவிடுவது வழக்கம் அதற்குக் காரணமாக பிள்ளைகளின் எதிர்காலத்தையும் இலங்கையின் நிர்வாகச் சீர்கேடு பொருளாதார ஸ்திரமின்மையைக் காரணம் கூறுவார்கள் அதை விமர்சிக்கவோ குற்றம்கூறவோ எவருக்கும் உரிமையில்லை ஏனென்றால் எங்களுக்கு எங்களின் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ அப்படித்தானே மற்றயோருக்கும் இருக்கும் ? ஆனால் சில மருத்துவர்கள் வெளிநாட்டில் கிடைக்கக்கூடிய வசதி வாய்ப்புக்களை புறந்தள்ளி இலங்கையில் தம்மக்களுக்கு சேவை செய்வதே தமக்கு ஆத்ம திருப்தி எனக்கூறி திரும்பிச் சென்றுவிடுவர் அப்படிப்பட்ட ஒரு குறிஞ்சி மலர் அந்த வைத்திய நிபுணர் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன் அதனால் அவர்மீது பெருமதிப்பும், பேரன்பும் கொண்டிருந்தேன்.
அன்றுதான் அந்த மருத்துவரை முதன் முதலில் சந்திக்கிறேன். மிகுந்த எளிமையாக இருந்தார். Down to earth என்பார்களே அந்த வார்த்தைக்கு நல்ல உதாரணமாகத் தெரிந்தார். பணத்திற்கு அப்பால் மருத்துவத்தை ஒரு தொண்டாக ஆதம திருப்திக்காக அவர் செய்கிறார் என்பது அவரது நடை உடை பாவனையில் அப்பட்டமாகத் தெரிந்தது. அம்மாவைப் பரிசோதித்து முடித்து தேவையான ஆலோசனைகள் மருந்துகளை தந்துவிட்டு சாவகாசமாக என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார் , அவுஸ்திரேலிய மருத்துவ பீடத்தில் கற்ற காலத்தைப் பற்றியும் தன்னுடைய அவுஸ்திரேலிய அனுபவங்கள் பற்றியும் , தன்னுடன் படித்து அவுஸ்திரேலியாவில் வைத்திய நிபுணர்களாக இருக்கும் நண்பர்கள் பற்றியும் சுவைபட உரையாடிய பின்னர் வீடு கிளம்பும்போது இறுதியாக அவரிடம் முக்கியமான ஒன்றைக் கேட்டேன்;
டொக்டர், மனிதர்களுக்கு அவர்களின் முதுமையில் ஏற்படக்கூடிய டிமென்ஷியா ( மறதிக் குறைபாடு ) உலகின் மிகப்பெரிய சவாலாக எதிர்காலத்தில் இருக்கப்போவதை புரிந்துகொண்ட மேற்குலகம் அதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எப்போதோ ஈடுபடத்தொடங்கிவிட்டன. அவுஸ்திரேலிய அரசு ( ரொனி அபேர்ட் பிரதமராக இருந்த காலத்தில் என நினைவு ) ஏற்கனெவே தனது வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான ஆராய்ச்சிக்காக பல மில்லியன் டொலர்களை ஒதுக்கிச் செயற்படுகிறது, ஆனால் யாழ்ப்பாணத்தில் எங்கள் மக்களுக்கு இது பற்றிய புரிதலோ விழிப்புணர்வோ இருப்பதாகத் தெரியவில்லை, மருத்துவர்களும் இல்லை டிமென்ஷியாவுக்கான கவுன்சிலர்களோ தாதிகளோ பெருமளவில் இருப்பதாகவும் தெரியவில்லை. இப்படியான சூழலில் இந்தத்துறையில் நிபுணத்துவ நிலையிலுள்ள நீங்கள் முன்னின்று அமைப்பையோ விஷேட மருத்துவ மனையையோ உருவாக்கும் செயற்பாட்டைத் தொடங்கினால் அதற்குப் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் நிச்சயம் உதவுவார்கள் என்றும் அந்த அமைப்பை நிறுவுவதற்கான இடமாக யாழ்ப்பாணத்தில் உள்ள என்னுடைய பெற்றோரின் காணியை நான் அன்பளிப்பாகத் தருகிறேன் என்றும் கூறினேன், இதைக் கேட்டதும் அதுவரை பொறுமையாகப் பேசிக்கொண்டிருந்த அந்த மருத்துவர் திடுக்குற்று அவசரமாக என்னை இடை நிறுத்திப்பேசி ஆச்சரியப்பட வைத்தார், அவர் கூறியதை அப்படியே பதிகிறேன்;
Sorry ஐசே, அப்படிச் செய்கிற எந்தவித உத்தேசமும் எனக்கு இல்லை ஏனெண்டால் அப்படி ஏதாவது அமைப்பை உருவாக்கி நல்லது செய்யத்தொடங்கினால் எம்மவர் பலருக்கு அது பிடிப்பதில்லை அந்த நல்ல முயற்சியைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் பொய்களும் கூறி அதை உருவாக்கியவருக்கு மிகபெரிய கெட்ட பெயரை ஏற்படுத்திவிடுவார்கள், அவரின் குடும்பத்துக்குள் பிரச்சினைகளை உருவாக்கி அவரையே இல்லாதொழித்துவிடுவார்கள், இப்படியான கசப்பான அனுபவங்கள் எனக்குத் தெரிய பலருக்கு இங்கு நடந்ததை என் கண்ணால் கண்டுள்ளேன் அதனால்தான் பலர் முன்வருவதில்லை, என்னைப்பொறுத்தவரை ஒரு மருத்துவ நிபுணராக என்னால் உலகின் எந்தநாட்டிலும் சென்று வாழாமல் விடாப்பிடியாக இவ்வளவு கஷ்டங்களின் மத்தியிலும் இலங்கையில், அதுவும் நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணத்தில் இருந்து என் மக்களுக்காக சேவை செய்வதே பெரும் சாதனை அந்த ஒரு மன நிறைவே எனக்குப் போதும்.
சமீபநாட்களாக அந்த வைத்தியர் கூறியதை அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன் காரணம் 80களில் எம்மைப்போல ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து, கனடாவில் உயர்கல்விகற்று , பிசினசில் மிகப்பெரியவெற்றிபெற்ற இந்திரகுமார் என்ற தமிழ் பில்லியனர் கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்று, நான் வளர்ந்ததைப்போல என்னுடைய அடுத்த சந்ததியும் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை தன் சொந்தச் செலவில் உருவாக்கி அதில் பலருக்கு புலமைப்பரிசில் கொடுத்துப் படிப்பித்தும் ஏனையோருக்கு இலாபமில்லாமல் கல்விக்கான செலவுகளை மட்டும் முடிந்தவரை கொடுக்கப்பண்ணி, சர்வதேசத்தரத்தில் உருவாக்க நினைப்பதையும், அந்தப்பல்கலைக்கழகத்தினை இலங்கை முழுவதும் விளம்பரப்படுத்தவும், அத்துடன் அங்கே யுத்தத்தால் பலவருடம் பாதிக்கப்பட்ட மக்கள் உயர்ந்த இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சியைப் பார்க்கட்டுமே என்ற எண்ணத்தாலும் ஒழுங்குபடுத்திய இசை நிகச்சியைப்பற்றி கீழ்த்தரமாக பொய் புரட்டுக்கள் கூறி பல அறிவிலிகள் அடிப்படை அறிவின்றி விமர்சிப்பதைப் பார்க்கையிலும், ராஜ் ராஜரட்ணம் என்ற அமெரிக்க ஈழத்தமிழர், யாழ்ப்பாணம் சென்று தங்கியிருந்து தனது சொந்தப்பணமான பல மில்லியண்டொலர்களை அங்கே முதலிடுகிறார் என்பதையும் தூரநோக்கின்றி மிகவும் முட்டாள்த்தனமாக விமர்சிப்போரையும் ஊடகங்களில் கடந்த சிலநாட்களாக அடிக்கடி பார்பதே அந்த மருத்துவரை நினைப்பதற்குக் காரணம்.
இங்கே இன்னொரு விடயத்தையும் அவதானிக்க முடிகிறது அதாவது யுத்தத்தால் சிதைந்துபோன தன் மக்களுக்கு தன்னாலான் ஏதாவது நல்லது செய்யவேண்டும் என முயல்பவர்களை விமர்சிப்போர் யார் எனப்பார்த்தால் அனேகமானவர்கள் மேற்குலகில் வேலை செய்யாமல் மற்றயோர் கட்டும் வரிப்பணத்தில் அரச உதவிப்பணத்தில் வாழ்வோரே.
தன் வாழ்க்கையில் தோற்றுப்போன இந்த மனிதர்கள் இலங்கையில் வாழும் மக்கள் தொடர்ந்து அவலத்துடனும் அழுத முகத்துடனும் கோயில்களுக்கு கூட்டம் கூட்டமாகச் சென்று கோஷம் போடுவதை மட்டும் பார்க்க ஆசைப்படுவ்து படு அயோக்கியத்தனம்.
நன்றி: Kalaichelvan Rexy Amirthan