மத்திய சீன நகரமான வுஹானில் COVID-19இன் தோற்றம் குறித்து ஆராயும், உலக சுகாதார அமைப்பு தலைமையிலான வல்லுநர்கள் குழு, ஆரம்பத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஹுவானன் சந்தைக்கு இன்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்குச் சென்றிருந்த நிபுணர் குழுவினர், 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கடந்த வியாழக்கிழமை முடித்த நிலையில், தற்போது வுஹானில் உள்ள ஆய்வகங்கள், சந்தைகள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
எனினும், ஆய்வு நடவடிக்கைகள் குறித்த இடங்கள் சரியாக அறிவிக்கப்படவில்லை என்றபோதும், முதற்கட்டமாக ஹுவானன் சந்தை மற்றும் வுஹான் ஆய்வகம் (Wuhan Institute of Virology) ஆகியவற்றைப் பார்வையிட குழு திட்டமிட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தோற்றத்தின் அடிப்படையை சீனா மறைத்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், நிபுணர் குழு ஜனவரி மாதத்தில் வுஹானுக்கு வரவிருந்தது.
எனினும், ஆரம்பத்தில் வுஹானில் உலக சுகாதார அமைப்பு தலைமையிலான விசாரணை, சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தர்க்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போதே சீனாவின் அனுமதி கிடைக்கப்பெற்று ஆராய்வு தொடங்கியுள்ளது.
இதேவேளை, விலங்குகள் உணவு மையமாக இருந்த ஹுவானன் சந்தையில் கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டது. எனினும், வேறு இடமொன்றில் இருந்துதான் வைரஸ் தோற்றம் பெற்றிருக்கக்கூடும் என்ற வகையில் உலக நாடுகள் விசாரணையை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.