Reading Time: < 1 minute

Prince Edward Island வெளிநாட்டவர்களுக்கெதிராக எடுக்க இருக்கும் முடிவொன்றை எதிர்த்து புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கனடாவின் Prince Edward Island மாகாணம், 2024, அதாவது, இந்த ஆண்டில், மாகாண நாமினி திட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மருத்துவ அமைப்புக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் மற்றும் வீடுகள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவை எடுக்க இருப்பதாக அம்மாகாணம் அறிவித்துள்ளது.

மருத்துவத் துறையில் பணியாற்றுவோர் மற்றும் கட்டுமானப் பணி செய்வோர் போன்ற சில துறையினருக்கு மட்டுமே நிரந்தரக் குடியிருப்பு அனுமதி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாக மாகாண அரசு அறிவித்துள்ளது. அதன் பொருள் என்னவென்றால், அடுத்த சில மாதங்களில், மற்ற துறைகளில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் பணி அனுமதிகள் நீட்டிக்கப்படாமல் போக வாய்ப்புள்ளது என்பதுதான்.

ஆகவே, மாகாண அரசின் இந்த முடிவை எதிர்த்து தலைநகர் Charlottetownஇல் புலம்பெயர்ந்தோர் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களில் ஒருவரான ரூபிந்தர் பால் சிங் என்பவர் கூறும்போது, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்துவரும், பணி செய்துவரும் புலம்பெயர்ந்தோரின் பணி அனுமதியை நீட்டித்தல் முதலான தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற, இம்மாதம், அதாவது, மே மாதம் 16ஆம் திகதிவரை காலக்கெடு வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மாகாண அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எங்களை ஏமாற்றிவிட்டது என்று கூறும் அவர், அவர்கள் எங்களுக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்துவிட்டார்கள், இது துஷ்பிரயோகிக்கும் செயலாகும் என்கிறார். அத்துடன், மே மாதம் 16ஆம் திகதி எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்றும் கூறுகிறார் அவர்.