Reading Time: 2 minutes

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 22 வயது இளைஞரும், Saskatchewan Roughriders அணியின் வீரரும் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

ரெஜைனா மற்றும் லம்ஸ்டன் பகுதிகளுக்கு இடையிலான நெடுஞ்சாலை 11இல், ஜூலை 18ஆம் திகதி சனிக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையின்படி, வெள்ளி நிற SUV வாகனம் தெற்கு நோக்கிச் செல்லும் பாதையில் தவறான திசையில் வடக்கு நோக்கிப் பயணித்துள்ளது. அப்போது எதிரே வந்த கறுப்பு நிற SUV வாகனத்துடன் அது நேருக்கு நேர் மோதியுள்ளது. இரு வாகனங்களிலும் சாரதிகளைத் தவிர வேறு எவரும் பயணிக்கவில்லை. இரண்டு சாரதிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

தவறான திசையில் பயணித்த வாகனத்தை ஓட்டியவர் அல்பர்டாவின் லெடுக் பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஜேடன் டால்க் (Jayden Dalke) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் Canadian Football League அணியான Saskatchewan Roughriders அணியின் வீரரும் அணித் தலைவர்களில் ஒருவருமாவார். 2022ஆம் ஆண்டு CFL தேர்வில் Saskatchewan அணியால் தெரிவுசெய்யப்பட்ட அவர், 2025ஆம் ஆண்டு Grey Cup வென்ற அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

விபத்துக்கு சுமார் அரை மணி நேரத்துக்கு முன்னர், வெள்ளி நிற SUV ஒன்று லம்ஸ்டன் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திலிருந்து பணம் செலுத்தாமல் சென்றதாக காவல்துறைக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. அந்த வாகனமே பின்னர் விபத்தில் சிக்கியதாக RCMP தெரிவித்துள்ளது.

டால்க் செலுத்திய வாகனத்துக்குள் மதுபானமும் கஞ்சாவும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும், விபத்து நேரத்தில் அவர் போதைப்பொருள் அல்லது மதுபானத்தின் தாக்கத்தில் இருந்தாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உடற்கூறு மற்றும் நச்சியல் பரிசோதனைகளின் முடிவுகளுக்காகக் காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.

மற்றைய வாகனத்தைச் செலுத்தியவர் ரெஜைனாவில் வசித்துவந்த 22 வயதான பீஷ்மா ராஜ்யகுரு (Bhishma Rajyaguru) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த அவர், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கனடாவுக்கு வந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்யகுருவின் உடலை இந்தியாவிலுள்ள அவரது பெற்றோரிடம் கொண்டு சென்று இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக நண்பர்கள் இணையவழி நிதி திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

தங்கள் மகனை இறுதியாக ஒருமுறை காணவும், அவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்யவும் அவரது பெற்றோருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க விரும்புவதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். நிதி திரட்டல் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே பொதுமக்களிடமிருந்து பெருமளவு ஆதரவு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சஸ்காட்செவன் RCMP தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.