Reading Time: < 1 minute

அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்படுத்தப்படுவதைத் தற்காலிகமாக ஒத்திவைக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு கனடிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

எனினும், வரிகள் குறித்த இந்தத் தொடர் அச்சுறுத்தல், நிறுவனங்களையும் அவற்றின் தொழிலாளர்களையும் பேரழிவை ஏற்படுத்தும் அதே அபாயநிலைக்குத் தள்ளுவதாகக் கவலை வெளியிட்டுள்ளது.

எதிர்கால வரிக் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாமல், வர்த்தக நிறுவனங்களால் நீண்டகால திட்டமிடல் மற்றும் முதலீட்டு முடிவுகளைத் தெளிவான நம்பிக்கையுடன் எடுக்க முடியாது என்று கனடாவின் உற்பத்தித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

புதிய வர்த்தக ஒப்பந்தத்தைச் இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சுமார் 28 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த புதிய 50 சதவீத வரியை மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதனிடையே, பேச்சுவார்த்தைகளில் “குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” ஏற்பட்டுள்ள போதிலும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் மீதமுள்ளதாகப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

புதிய வரிகள் விதிக்கப்பட்டால் அது கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளையுமே பலவீனப்படுத்தும், செலவுகளை அதிகரிக்கும் மற்றும் உலக அளவில் இரு நாட்டு நிறுவனங்களின் போட்டியிடும் திறனைக் குறைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, பேச்சுவார்த்தையாளர்கள் இந்த கூடுதல் நேரத்தைப் பயன்படுத்தி ஒரு முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முயற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.