Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரொ பகுதியில் இடம்பெற்று வரும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதியவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இரண்டு சந்தேக நபர்கள் இவ்வாறு முதியவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரிடமிருந்து அண்மையில் 6000 டொலர் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தங்களது பேரப்பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிணையில் விடுவிக்க பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி முதியவர்களிடமிருந்து பணம் பறிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தொலைபேசி அழைப்புகளோ, அல்லது வேறு வழியிலான தகவல்களோ கிடைக்கப்பெற்றால் அவற்றை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பிரம்டனைச் சேர்ந்த 20 வயதான ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் மற்றுமொரு நபர் மீதும் இந்த மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுகளை பொலிஸார் முன் வைத்துள்ளனர்.

கடந்த காலங்களிலும் இவ்வாறு முதியவர்கள் ஏமாற்றப்பட்டு பணம் பறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.