நேற்று இரவு ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் வைத்து பெண் ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ள நிலையில், தாக்குதல் நடாத்திய நபரைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Yonge Streetற்கு வடக்கே, Victoria Street மற்றும் Dundas Street பகுதியில், நேற்று இரவு 9:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆண் ஒருவர் குறித்த அந்தப் பெண்ணை சுத்தியலால் தாக்கியுள்ளதாகவும், அந்த ஆணிடம் கத்தி ஒன்றும் காணப்பட்டதாகவும், இந்தத் தாக்குதல் தொடர்பிலான காணொளி ஆதாரத்தினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் ரொரன்ரோ காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை உடனடியாக கண்டறியவில்லை என்ற போதிலும், பின்னர் அந்தப் பெண் மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகவும், எனினும் அவருக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரம் தெரியவில்லை எனவும், சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர் சுமார் ஆறு அடி உயரமுள்ள 35 வயது ஆண் என்றும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.