Reading Time: < 1 minute

கனடாவின் மொன்றியல் பகுதியில் அதிகரித்து வரும் நகைக்கடைக் கொள்ளைகளைத் தடுக்கும் வகையில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சுமார் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பதின்ம வயதுச் சிறுவர்களும், கொள்ளைகளைத் திட்டமிட்டு வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படுபவர்களும் அடங்குகின்றனர்.

Tamil Business Directory

2026 ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 31 வரையான காலப்பகுதியில் மொன்றியல் பகுதியில் 55 நகைக்கடைக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 34 சம்பவங்கள் கண்ணாடிகளை உடைத்து நகைகளை அள்ளிச் செல்லும் Smash and Grab முறையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொள்ளைகளில் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, Roblox, Minecraft போன்ற இணையவழி விளையாட்டுத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்களை அணுகி, பண ஆசை காட்டி குற்றச்செயல்களில் ஈடுபடுத்துவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்படும் தங்க நகைகளை கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதற்கான தொடர்புகளை குற்றச் செயல்களை வழிநடத்துபவர்கள் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் சிறுவர்களை குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தும் போக்கு ஆகியவை இத்தகைய கொள்ளைகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

கொள்ளைகளை மேற்கொள்ளும் சிறுவர்களை மட்டுமன்றி, அவர்களைப் பின்னணியில் இருந்து இயக்கும் நபர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகளை மொன்றியல் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.