கனடாவில் பைஸர் கொவிட் 19 தடுப்பூசி பெற்றவர்களுடன் ஒப்பிடுகையில் மொடர்னா தடுப்பூசி பெற்றவர்களிடையே அரிதான இதய அழற்சி பாதிப்புக்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதாக கனேடிய சுகாதார அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
30 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களிடமும், பெரும்பாலும் ஆண்களிடையே இதய அழற்சி ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தரவு சுட்டிக்காட்டியது.
பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் ஒப்பீட்டளவில் லேசான நோயறிகுறிகளை அனுபவித்து விரைவில் குணமடைந்துள்ளனர் எனவும் கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று நோயைத் தொடர்ந்து இதய அழற்சி உள்ளிட்ட இதய நோய்களின் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் அரிதான இவ்வாறான ஆபத்துக்களை விட கொவிட் 19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் அதிகம் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.