Reading Time: < 1 minute

கனடாவுக்குக் கிடைக்கும் தடுப்பூசிகளில் மேலதிகமாக உள்ளவற்றை லிபரல் அரசாங்கம் ஏழை நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், அந்த முயற்சி குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.

கோவிட்19 தொற்று நோயால் ஏற்பட்டுள்ள சர்வதேச அளவிலான மனிதாபிமான நெருக்கடி குறித்து கனடா பொதுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழுவின் அறிக்கையில் 10 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் மேலதிக தடுப்பூசிகளை வளரும் நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

தடுப்பூசிகளைப் பகிர்வதோடு மட்டுமன்றி மனிதாபிமான அடிப்படையிலான சர்வதேச உதவித் திட்டங்களுக்காக வரவு செலவுத் திட்டத்தின் ஊடான அதிக நிதியை ஒதுக்குவதன் மூலமும் அந்த உலகளாவிய முக்கிய நெருக்கடிகளுக்கு தீா்வு காணும் முயற்சியில் கனடா முன்னிலை வகிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

கனடா ஏற்கனவே குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்களுக்காக சுமார் 40,940 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இதில் கோவாக்ஸ் சர்வதேச பொதுத் தடுப்பூசித் திட்டமும் ஒன்றாகும்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் மிக மோசமான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகளின் சமூக, பொருளாதார பின்னடைவுகளை சீரமைப்பதிலும் கனடாவின் பங்களிப்பு முக்கியம் எனவும் எம்.பிக்கள் குழுவின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.