Reading Time: < 1 minute

மெய்நிகர் வழியிலான அவசர மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேலும் 3 மாதங்களுக்கு ஒண்டாரியோ மாகாண அரசு நீடித்துள்ளது.

இந்த வெள்ளிக்கிழமையுடன் அரசின் நிதி ஒதுக்கீடுகள் முடிவடைவதன் காரணமாக, மெய்நிகர் அவசர சிகிச்சை பிரிவுகளை மூடுவதற்கு பல மருத்துவமனைகள் தயாராகி வந்தன. இந்நிலையில், ஜூன் 30ஆம் திகதிவரை நிதியினை வழங்குவதற்கான ஒப்பந்தம், ஒண்டாரியோ மருத்துவ கழகத்துடன் எட்டப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அவசியமான சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு, மருத்துவ கழகத்துடன் இணைந்து பணிபுரியவுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும், கடைசி நேரத்திலேயே இந்த நிதி ஒதுக்கீட்டு ஒப்பந்தம் எட்டப்பட்ட சூழலில், தமது மெய்நிகர் அவசர சிகிச்சை பிரிவுகளை மூடும் நடவடிக்கையினை தவிர்க்க முடியாமல் போயுள்ளதாக, ஒண்டாரியோவில் பல மருத்துவமனைகளை இயக்கிவரும் Unity Health Toronto தெரிவித்துள்ளது.

மிக வெற்றிகரமாக அப்பிரிவுகள் செயற்பட்டதை அது சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை, ஒண்டாரியோ அரசின் நிதி ஒதுக்கீடுகள் நிறைவடைந்தாலும் கூட, தொடர்ந்து தமது மெய்நிகர் அவசர சிகிச்சை பிரிவுகளை இயக்கும் நிலைப்பாட்டில் சில மருத்துவமனைகள் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.