கனடாவில் கொவிட் 19 தொற்று நோய்ப் பரவலின் தற்போதைய போக்குத் தொடர்ந்தால் இந்தமாத இறுதியில் முன்னொருபோதும் இல்லாத வகையில் நெருக்கடி உச்சத்தை எட்டும் என மத்திய அரசின் புதிய மாதிரிக் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாதிரிக் கணிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுக் கருத்து வெளியிட்ட கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம், இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 முதல் 39 வயதிற்குட்பட்ட கனேடியர்களின் வீதம் அதிகமாகவுள்ளது. இத்தகையவர்கள் அவசரமாகத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
தொற்று நோயாளர் தொகை மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். இது மீண்டும் மக்கள் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய தருமாகும் எனவும் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் தெரசா டாம் தெரிவித்தார்.
கனடா பொது சுகாதார நிறுவனம் (PHAC) வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 74 வீதமானவர்களும் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் 77 வீதம் பேரும் இதுவரை முழுமையாகத் தடுப்பூசி பெற்றுள்ளனர். 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 82 வீதமானவர்களும் முழுமையாகத் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் தடுப்பூசி வீதம் இதனையும் விட அதிகமாகும் எனவும் தரவுகள் கூறுகின்றன.
இந்நிலையில் இளையவர்கள் இன்னும் வேகமாகம் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் வலியுறுத்தினார்.
இளையவர்கள், வேலை மற்றும் பொழுது போக்கு காரணங்களுக்கான அதிகம் வீடுகளை விட்டு வெளியேறும் தரப்பினராக உள்ளனர். இதனால் அவர்கள் மத்தியில் தொற்று வீதம் அதிகரித்துள்ளது என அவா் கூறினார்.
ஜூலை நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் நடுப்பகுதி வரையான தரவுகளின் பிரகாரம் தடுப்பூசி போடப்பட்டவர்களை விட தடுப்பூசி போடாதவர்கள் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படும் வீதம் 12 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மருத்துவமனை சேர்க்கை 36 மடங்கு அதிகமாகவும் இருப்பதாகவும் டாம் குறிப்பிட்டார்.
தடுப்பூசி பெறத் தகுதியான 5.2 மில்லியன் கனேடியர்கள் இதுவரை எந்தவொரு கொவிட்-19 தடுப்பூசியையும் பெறவில்லை என கனடா பொது சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. மேலும் மேலும் 2.5 மில்லியன் பேர் ஒரு தடுப்பூசியை மட்டுமே பெற்றுள்ளனர். இவ்வாறு தடுப்பூசியைத் தவிர்ப்பவர்கள் அதிக ஆபத்துப் பிரிவினராக உள்ளனர் என டாம் கூறினார்.
தற்போதைய போக்கு கட்டுப்பாடின்றித் தொடர்ந்தால் இந்த மாத இறுதி முதல் தொற்று நோய் நெருக்கடி தீவிரமாகும். கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் பெரும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான சந்தர்ப்பம் இன்னமும் உள்ளது எனவும் கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் வலியுறுத்தினார்.