கியூபெக் மாகாணத்தில் 16 வயதுச் சிறுவன் ஒருவா் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்துள்ளார். மாகாணத்தில் பதிவான மிகக் குறைந்த வயதுடைய ஒருவரின் கொரோனா மரணம் இதுவாகும்.
மொன்றியலில் உள்ள சிறுவர் மருத்துவமனையில் இந்தச் சிறுவன் கடந்த வாரம் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த மரணத்தின் மூலம் பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்த தேவையற்ற கவலைகளை ஏற்படுத்தக் கூடாது என மொன்றியல் பொது சுகாதார அதிகாரிகள் நேற்று புதன்கிழமை கருத்து வெளியிட்டுள்ளனர்.
தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மொன்றியல் நகரம் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதாகவும் அவா்கள் குறிப்பிட்டனர்.
பாடசாலைகள் தொடர்ந்தும் பாதுகாப்பாக இடம்பெற்று வருகின்றன. எங்கள் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதே அவா்களின் சிறப்பான வளர்ச்சிக்கு உதவும் என மொன்றியல் பொது சுகாதாரத் துறை தலைவரான டாக்டர் மைலின் ட்ரூயின் கூறினார்.
கோவிட் தொற்று நோயால் இளையவர்கள் பாதிக்கப்படுவதும் இறப்புக்களும் கியூபெக்கில் அரிதாகவே உள்ளன. தற்போது உயிரிழந்த 16 வயதுச் சிறுவனுடன் சோ்த்து இதுவரை 20 வயதுக்குட்பட்டவர்களிடைய இரண்டு மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன எனவும் ட்ரூயின் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, 16 வயதுச் சிறுவனின் மரணம் சனிக்கிழமையன்று நிகழ்ந்ததாக கியூபெக் மாகாண பொது சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொன்றியல் சைன்ட்-ஜஸ்டின் சிறுவர் மருத்துவமனையில் இந்த மரணம் பதிவானது. எனினும் உயிரிழந்த சிறுவன் குறித்த எந்த விவரங்களையும் மருத்துவமனை வெளியிடவில்லை. ஆபத்தான புதிய வகை வைரஸ் தொற்றால் இந்தச் சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தாரா? என்பது குறித்தும் அறிவிக்கப்படவில்லை.