Reading Time: < 1 minute

மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Laidlaw Boulevard மற்றும் நெடுஞ்சாலை 7 பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த வர்த்தக வளாகத்தில் நேற்று இரவு 11 மணிக்குச் சற்றுப் பின்னராக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து தாங்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது, அங்கே இருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவி்ட்ட நிலையில், மற்றையவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிக்ள தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதனால், உயிரிழந்தவர், காயமடைந்தவர் விபரங்கள் உட்பட எந்த விபரங்களையும் வெளியிடமுடியாதுள்ளதாகவும், தம்மிடம் தற்போதைக்கு பெரிதாக இதுகுறித்த தகவல்கள் எவையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ள காவல்துறையினர், மேலதிக விபரம் அறிந்தோர் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போதைக்கு அங்கிருந்த சிலருடன் பேசியுள்ளதாகவும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரங்களை ஆய்வுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அது தவிர சம்பவம் இடம்பெற்ற வேளையில் அந்தப் பகுதி ஊடாக பயணித்த வாகனங்களின் ஒளிப்பதிவு ஆதாரங்களையும் பார்வையிட விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.