தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவிலுள்ள Dorval என்ற இடத்தில் அமைந்துள்ள Résidence Herron என்னும் முதியோர் இல்லத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக 27 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வரிசையாக அமரர் ஊர்திகள் அந்த முதியோர் இல்லத்திலிருந்து வெளியேறுவதைக் கண்ட முதியவர்களின் குடும்பத்தினர், அந்த இல்லத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய முயன்று வருகின்றனர்.
அங்கு இறந்தவர்கள் அனைவருமே கொரோனாவால் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதும் நிலையில், முதியோர் இல்ல உரிமையாளர்கள் சரியான விளக்கம் கொடுக்கவில்லை என கூறப்படுகின்றது.
முதியோர் இல்லத்திலிருந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா இருப்பது தெரியவரவே, மருத்துவமனையிலுள்ள செவிலியர் ஒருவர் சுகாதாரத்துறைக்கு தகவலளித்துள்ளார்.
தகவலையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த முதியோர் இல்லத்திற்கு செல்ல, அது ஒரு சித்திரவதை முகாம் போல காணப்பட்டதைக் கண்டு அதிர்ந்துபோனதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு நோயாளிகள் தங்கள் படுக்கையில் இறந்து கிடக்க, படுக்கையிலிருந்து சிலர் கீழே விழுந்துகிடந்திருகிறார்கள்.
பல நாட்களாக கவனிக்கப்படாத நோயாளிகள் சிலரின் டயப்பர்கள் மாற்றப்படாமல் உடல் முழுவதும் மலம் பூசப்பட்ட நிளையில், பல நாட்களாக உணவோ தண்ணீரோ இல்லாமல் சிலர் கிடந்துள்ளார்கள்.
இல்லத்தின் இரண்டாம் தளத்திலுள்ள அனைவருக்கும் கொரோனா தொற்றியுள்ளது. பல பணியாளர்கள் பயந்து ஓடிப்போக, அந்த தளத்தில் வெறும் இரண்டு பணியாளர்கள் மட்டுமே அங்கு இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.