கனடாவில் சந்தைக்கு வரும் போலி N-95 முககவசங்கள் குறித்து ஹெல்த் கனடா எச்சரித்துள்ளது.
கனடாவுக்கான விநியோகஸ்தர்களிடமிருந்து பெப்ரவரி நடுப்பகுதி முதல் இதுவரை சுமார் 3 இலட்சத்து 30 ஆயிரம் போலி N-95 முகக் கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அமெரிக்கா-கனடா எல்லையில் கிட்டத்தட்ட 3 இலட்சத்து 65 ஆயிரம் போலி முகக் கவசங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன என ஹெல்த் கனடாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி முக கவசங்கள் வடிவத்தில் அசலை ஒத்ததாக காணப்படுகின்றன. எனினும் இவற்றின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த எந்த உத்தரவாதங்களும் போலி தயாரிப்பாளர்களிடம் இல்லை என ஹெல்த் கனடா கூறியுள்ளது.
3M நிறுவன தயாரிப்புக்களை ஒத்த முக போலி முக கவசங்களே பெரும்பாலும் கண்டறியப்பட்டுள்ளன.
இத்தகைய முக கவசங்கள் வடிவத்தில் அசலை ஒத்துள்ளபோதும் அவற்றில் வித்தியாசமான நாற்றங்கள், முறையற்ற பொதியிடல், எழுத்துப் பிழைகள் போன்றன காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலி முக கவசங்கள் உள்ளிட்ட பொருட்கள் கனடாவுக்கு எடுத்துவரப்படும் செயற்பாடுகள் தீவிரமானவை. இவ்வாறான போலி தயாரிப்புக்கள் கனடாவுக்குள் வருவதைத் தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் ஹெல்த் கனடா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.