கனடாவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, வீட்டு வசதி பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக, பலர் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட இணையத்தில் நிதி கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாதாந்திரச் செலவுகள், உணவு, வீட்டு வாடகை உள்ளிட்ட அவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல், பல கனடியர்கள் GoFundMe போன்ற இணைய வழி நிதித் திரட்டும் தளங்களை நாடி வருகின்றனர்.
GoFundMe தளத்தின் தகவலின்படி, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் மட்டும், அடிப்படைத் தேவைகளுக்காக சுமார் 12,000 நிதித் திரட்டல்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது, கனடாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின் தாக்கத்தை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மூத்த ஆய்வாளர் கரோலின் விட்ஸ்மேன், கனடாவில் நிலவும் வீட்டுவசதி நெருக்கடியே இந்த நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
மக்கள் தங்களின் குழந்தைகளுக்கு உணவளிக்கவும், வீட்டு வாடகை செலுத்தவும் அந்நியர்களிடம் உதவி கேட்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்பது மிகப்பெரிய சமூகப் பிரச்சினை என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி, ஒன்டாரியோவில் வீட்டுக் கடன் நிலுவைகள் 52 விழுக்காடும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 36 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், வீட்டு உரிமையாளர்கள் மட்டுமல்லாமல் வாடகையாளர்களும் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 2.8 விழுக்காடாக உயர்ந்ததும், எரிபொருள் விலை 28.6 விழுக்காடு அதிகரித்ததும் மக்களின் வாழ்க்கைச் செலவினை மேலும் உயர்த்தியுள்ளது.
2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 4.5 மில்லியன் கனடியர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார வல்லுநர்கள், இணைய வழி நிதித் திரட்டல்களை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, கனடாவின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் உள்ள பலவீனங்களையும், வீட்டு வசதி மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் தீவிரத்தையும் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
வாடகை, உணவு, எரிபொருள், கடன் தவணைகள் போன்ற அடிப்படைச் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சாதாரண குடும்பங்களின் மாதாந்திர நிதிசுமை மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.




