பொதுநலவாய நாடுகளின்தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகக் கனடிய பிரதமர் மார்க் கார்னி ஆண்டிகுவா மற்றும் பார்புடா நாட்டின் செயின்ட் ஜான்ஸ் நகருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நவம்பர் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் வர்த்தகத்தை மேம்படுத்துவதும், முதலீடுகளை ஈர்ப்பதுமே அவரது முதன்மை முன்னுரிமைகளாக இருக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டின் இவ்வாண்டிற்கான கருப்பொருள்: “வளமான பொதுநலவாயத்திற்கான பங்காளித்துவம் மற்றும் முதலீடுகளை முடுக்கிவிடுதல்” என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் பொதுநலவாய அமைப்பிற்குள் தனது பங்காளித்துவங்களை ஆழப்படுத்தக் கனடா விரும்புவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அபாயங்களும் பிளவுகளும் நிறைந்த உலகளாவிய சூழலில், கனடா தனது பொதுநலவாய பங்காளிகளுடன் மேலும் நெருக்கமாகச் செயல்படுகிறது என கார்னி தெரிவித்துள்ளார்.
எமது மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப, எமது பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்தளிக்கப்பட்ட பலமாக மாற்றி – வர்த்தகத்தை விரிவுபடுத்தி, காலநிலை ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு அடுத்தபடியாக, பொதுநலவாய அமைப்பின் 3வது மிகப்பெரிய பொருளாதாரமாகவும், 2வது மிகப்பெரிய நிதிப் பங்களிப்பாளராகவும் கனடா விளங்குவது குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய அமைப்பின் தலைவரான மூன்றாம் சார்லஸ் மன்னர் மற்றும் கமீலா அரசியார் ஆகியோர் கரீபியன் தீவான ஆண்டிகுவாவில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். செவ்வாய்க்கிழமை நடைபெறும் தொடக்க விழாவில் மன்னர் மூன்றாம் சார்லஸ் உரையாற்றவுள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.