பைசர் மருந்து நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் வாய்வழி கொவிட் தடுப்பு மருந்தை (Paxlovid – Pfizer’s oral COVID-19 antiviral) பயன்படுத்தி கொவிட் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஹெல்த் கனடா அங்கீகாரம் வழங்கியுள்ளது.
லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்த தடுப்பு மருந்தை வழங்கி சிகிச்சை அளிக்க முடியும்.
எனினும் முதல் கட்டமாக குறைந்தளவு தடுப்பு மருந்துகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதால், இந்த மருந்து தற்போதைக்கு போதியளவு இல்லை என கனடா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனடாவில் ஒமிக்ரோன் தீவிர பரவல் காரணமாக மருத்துவமனை சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல மாகாணங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகின்றன. அடுத்து வரும் வாரங்களில் தொற்று நோயாளர் தொகை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் பைசர் மருத்து நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் வாய்வழி கொவிட் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொவிட் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஹெல்த் கனடா அங்கீகாரம் வழங்கியுள்ளமை முக்கியமானது. இது சிகிச்சை முறையை எளிதாக்கும். அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும் என கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒரு மில்லியன் பாக்ஸ்லோவிட் வாய்வழி கொவிட் தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் பைசர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கனேடிய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும் இவற்றில் 30,400 தடுப்பு மருந்துகளே முதல் கட்டமாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக கனேடிய மத்திய சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் தெரிவித்தார். மேலும் 120,000 தடுப்பு மருந்துகளை மார்ச் இறுதிக்குள் வழங்க உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாக்ஸ்லோவிட், கடுமையான நோய் அறிகுறிகள் ஏற்படாமல் தடுப்பதிலும் மருத்துவமனை அனுமதியைத் தவிர்ப்பதிலும் இறப்புக்களை தடுப்பதிலும் கிட்டத்தட்ட 90% பயனுள்ளதாக உள்ளதாக முதல்கட்ட ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்வழி தடுப்பு மருந்தை கொவிட் அறிகுறிகள் தோன்றியது முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருந்தவாறே எடுத்துக்கொள்ள முடியும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.