ஒன்ராரியோவின் சில நகரங்களில் இயங்கிவந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை இலக்குவைத்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது சுமார் 200 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொக்கெய்ன் உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வருகின்றமை மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றமை உள்ளிட்ட சந்தேகங்களின் அடிப்படையில், ஒட்டாவா, நயாகரா மற்றும் சட்பரி காவல்துறையினர் கடந்த 2018ஆம் ஆண்டு யூன் மாதமளவில் ஒரு குழுவினரை இலக்குவைத்து விசாரணைகளை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இந்தக் குழுவில் இருந்தோர் ஒன்ராறியோவின் பல பகுதிகளிலும் பாரிய உயர்ரக உந்துருளிகளை வைத்திருக்கும் முக்கிய புள்ளிகள் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் மீது நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு விசாரணைகளை அடுத்து, கடந்த வாரத்தில் குறித்த இந்த நகரங்கள் அனைத்திலும் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்களை நடாத்திய காவல்துறையினர், அதன்போது ஒரு மில்லியன் டொலர்களுக்கும் மேலான பெறுமதி உடைய 12.5 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப் பொருள் உள்ளிட்ட மேலும் பல போதைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர்.
அது மட்டுமின்றி தாக்குதல் தரம் வாய்ந்த துப்பாக்கிகள் மூன்று உள்ளிட்ட 11 துப்பாக்கிகள், மேலும் சில கைத்துப்பாக்கிகள் போன்றவையும் இந்த சிறப்பு நடவடிக்கையின்போது மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் பல பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். எனினும் எத்தனை பெண்கள் இவ்வாறு பாதிப்புகளுக்கு உள்ளானார்கள் என்ற விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இந்தக் குழுவினர் மனிதர்களைப் பயன்படுத்தி அனைத்து விதத்திலும் பணம் சம்பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், இவர்கள் தொடர்பிலான விசாரணகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.