கனடாவின் பெடரல் அரசு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எத்தனை புலம்பெயர்வோரை வரவேற்க இருக்கிறது என்பதைக் குறித்த தனது புலம்பெயர்தல் இலக்கை அறிவிக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது.
ஆனால், ஏற்கனவே கனடாவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களோ, வேறொரு நாட்டுக்கு புலம்பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் ஒரு கூட்டத்தினர் கனடாவை விட்டு வேறொரு நாட்டுக்கு புலம்பெயர்ந்துள்ளார்கள். The Institute for Canadian Citizenship and the Conference Board of Canada என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள், இந்த எண்ணிக்கை 2017 மற்றும் 2018இல், 31 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றன. இதுவரை உள்ளதிலேயே இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்கிறது அந்த ஆய்வு.
சமீப காலமாக, யார் கிளப்பிவிட்ட கதை என்று தெரியவில்லை, புலம்பெயர்ந்தோரால் கனேடிய மக்களுடைய வரிப்பணம் வீணாவதாகவும், வீடுகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் பரப்பப்பட்டுவருகிறது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் புலம்பெயர்தலுக்கு எதிராக மாறிவருகிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெரியப்படுத்தியுள்ளது.
ஆனால், யார் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், கனடாவுக்குப் புலம்பெயர்ந்தோர் தேவை என்பது மறுக்கமுடியாத உண்மை. The Institute for Canadian Citizenship and the Conference Board of Canada என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள், கனடாவின் எதிர்கால வளமான வாழ்வு, புலம்பெயர்தலை சார்ந்திருக்கிறது என அடித்துச் சொல்கின்றன.
மேலும், கனடாவுக்கு புலம்பெயர்வோர் வருவது மட்டுமல்ல, அவர்கள் கனடாவிலேயே தங்கிவிடுவதும் அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆக, கனடா அரசு புலம்பெயர்ந்தோரை வரவேற்கத் திட்டமிடுவது மட்டும் போதாது, அவர்களை தக்கவைப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வது அவசியம் என்கிறார்கள் அவர்கள்.
ஒரு நல்ல எதிர்காலம் கருதி ஒரு நாட்டுக்கு புலம்பெயர்வோர், ஏன் அங்கிருந்து வெளியேறி வேறொரு நாட்டுக்குச் செல்லவேண்டும்?
அவர்கள் எதிர்பார்த்த வாழ்வு அமையவில்லை என்றால்தானே அவர்கள் வேறொரு நாட்டுக்குப் புறப்படுவார்கள்?
ஆக, கனடாவுடன் ஒன்றிணைந்து வாழும் அளவுக்கு பொருளாதார வசதி, அதாவது வருவாய், இது நம் நாடு என்னும் ஒரு எண்ணத்தைத் தரும் சூழல், இனவெறுப்பின்மை, வாழ வீடு, படித்த படிப்புக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வேலை என்பதுபோன்ற விடயங்கள் கிடைக்கவில்லை என்றால், அவை எங்கே கிடைக்குமோ, அந்த நாட்டை நோக்கித்தான் புலம்பெயர்ந்தோர் செல்வார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
ஆக, புலம்பெயர்ந்தோரை வரவேற்றால் மட்டும் போதாது, நாங்கள் ஆண்டொன்றிற்கு இத்தனை புலம்பெயர்வோரை வரவேற்கிறோம் என பெருமை பேசிக்கொள்வதுடன் நிற்காமல், கனடாவுக்கு வந்த புலம்பெயர்ந்தோரின் தேவைகளை சந்தித்து, அவர்கள் கனடாவில் அமைதியாக, மகிழ்ச்சியாக வாழும் ஒரு சூழலை கனடா உருவாகித்தரவேண்டும்.
இல்லையென்றால், ஆய்வாளர்கள் சொல்வது போல, கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள், கனடாவிலிருந்து வேறொரு நாட்டுக்கு புலம்பெயர்ந்துவிடுவார்கள். அது நிச்சயம், பொருளாதார ரீதியிலும், மக்கள்தொகை ரீதியிலும் கனடாவை பாதிக்கும் என்பதால், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதை விட்டு விட்டு, அவர்களை தக்கவைத்துக்கொள்ள, தக்க நடவடிக்கைகளை எடுப்பதே கனடாவுக்கு நல்லது.