Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பெருவெள்ளத்தால் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு உதவித்தொகையை அறிவித்துள்ளது மாகாண நிர்வாகம்.

பெருவெள்ளத்தால் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களில் தகுதியுடையவர்களுக்கு 2,000 டொலர் உதவித்தொகை வழங்க மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

குறித்த தொகையானது கனேடிய செஞ்சிலுவை சங்கம் வாயிலாக தகுதியுடையவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள குறித்த தொகை உதவியாக இருக்கும் என அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் வீசிய புயலால் பாதிக்கப்பட்டு, தங்கள் குடியிருப்புகளில் இருந்து பாதுகாப்பு கருதி பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்ட மக்களே உதவித்தொகைப் பெற தகுதியுடையவர்கள்.

இதனிடையே, நன்கொடை அளிக்கக்கூடிய அனைத்து பிரிட்டிஷ் கொலம்பிய மக்களும் உரிய வகையில் உதவ முன்வர வேண்டும் என துணைப் பிரதமர் மைக் ஃபார்ன்வொர்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீப காலமாக நாம் பல பேரழிவுகளை எதிர்கொண்டு வருகிறோம் என குறிப்பிட்டுள்ள மைக் ஃபார்ன்வொர்த், ஒவ்வொருமுறையும் நாம் ஒன்றாக போராடி அதை வெற்றி கண்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் வணிகர்கள் குழுவானது ஏற்கனவே 1 மில்லியன் டொலர் நன்கொடையாக அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2,000 டொலர் உதவித்தொகைப் பெறத் தகுதியுடையவர்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.