பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள சானிச் பாடசாலை ஊழியர்களின் போராட்டம், இரண்டாவது வாரமாகவும் தொடர்கின்றது.
கடந்த திங்கட்கிழமையிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவரும் சானிச் பாடசாலை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்புப் போராட்டத்தினால், 700இற்கும் மேற்பட்ட மாவணர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாவணர்களின் நலன் கருதி, சானிச் பாடசாலை ஊழியர்களும், பாடசாலை மாவட்ட நிர்வாகத்தினரும் ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு தீர்மானித்தனர். இதனால் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும், அந்தப் பேச்சுவார்த்தை சாதகமானதொரு முடிவினைப் பெற்றுக்கொடுக்கவில்லை. எனவே ஊழியர்களின் போராட்டம், இரண்டாவது வாரமாகவும் தொடர்கின்றது.
இதேவேளை, பாடசாலையின் பெற்றோர்கள், இதுவரை வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க அவர்கள் விரும்புகின்றனர்.
கியூப் லோக்கல் 441 பிரதிநிதித்துவப்படுத்தும் கல்வி உதவியாளர்கள், பாதுகாவலர்கள், பஸ் சாரதிகள் மற்றும் ஏனைய உதவி ஊழியர்கள் என அனைவரும் கடந்த திங்கட்கிழமையிலிருந்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள், கிரேற்றர் விக்டோரியா மற்றும் சூக்கின் அண்டை மாவட்டங்களில் இருப்பதை விட சானிச் பாடசாலையில் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும், ஊதிய சமநிலை பேணப்பட வேண்டுமெனவும் கோரி இந்தப் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதிய சமத்துவம் ஒரு கவலையான விடயம் எனத் தெரிவித்துள்ள பாடசாலை மாவட்ட நிர்வாகம், பொதுத்துறை ஊதிய உயர்வை ஆண்டுக்கு இரண்டு சதவீதமாக கட்டுப்படுத்தும் ஒரு மாகாண கட்டமைப்பு இதுவென்பதாலேயே குறித்த பிரச்சினை எழுந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.