பழமைவாதக் கட்சியின் கல்கரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் ஓப்ராய் மிக மோசமான ஈரல் புற்றுநோய்யினால் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
நாடாளுமன்றில் பெரிதும் மதிக்கப்படும், விரும்பப்படும் நபராக விளங்கிய அவரின் இந்த இழப்பு குறித்த செய்தி சனிக்கிழமை காலையில் வெளியான நிலையில், எதிர்பாராத இந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த மாதத்தில் தனது 69ஆவது வயதை எட்டிய அவருக்கு, கடந்த மாதமளவில் தான் புற்றுநோய் உச்ச நிலையில் இருந்தமை கண்டறியப்ப்டடது.
இவரது இந்த இழப்பு குறித்து அதிர்ச்சியும் இரங்கலும் வெளியிட்டுள்ள பழமைவாதாக் கட்சித் தலைவர், தீபக் ஓப்ராய் எங்கு சென்றாலும் அங்கு அன்பும், நகைச்சுவையும் பரவும் எனவும், அவர் நோய்வாய்ப்பட்டுள்ள தகவல் தனக்கு சில நாட்களுக்கு முன்னரே தெரியவந்ததாகவும், இறுதியாக நாடாளுமன்றில் பார்த்தபோதுகூட அவர் நல்ல நிலையிலேயே காணப்ப்டடதாகவும், இந்தச் செய்தி தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதானவும் குறிப்பிட்டுள்ளார்.
பழமைவாதக் கட்சியின் பிரிட்டிஷ் கொலம்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் வராவாவும் கடந்த யூன் மாதம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டில் உயிரிழந்துள்ள இரண்டாவது பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனேடிய நாடாளுமன்றுக்குத் தெரிவான முதலாவது இந்து நாடாளுமன்ற உறுப்பினரான தீபக் ஓப்ராய், 1997ஆம் ஆணடிலிருந்து தற்போதுவரை மிக நீண்டகால இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினராக பழமைவாதக் கட்சியில் நீடித்து வந்த பெருமையைப் பெற்றுள்ளார். அது தவிர கனேடிய வரலாற்றில் வெளியுறவு அமைச்சின் செயலாளராக மிக நீண்டகாலம் செயலாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு.