கனடாவின் குடியிருப்பு பள்ளி முறைமையில் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளில் கத்தோலிக்க தேவாலயங்கள் கொண்டிருந்த பங்கிற்காக முறையாக மன்னிப்புக் கோர வேண்டும் என உலக கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸிடம் கனடா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கம்லூப்ஸ் நகருக்கு அருகிலுள்ள முன்னாள் குடியிருப்புப் பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடி குழந்தைகளின் எச்சங்கள் கடந்த வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சில எச்சங்கள் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுடையவை. ஆனால் அவர்கள் இறந்ததற்கான காரணங்கள் மற்றும் காலம் இன்னும் அறியப்படவில்லை.
கம்லூப்ஸ் இந்திய குடியிருப்பு பள்ளி 1890 ஆம் ஆண்டில் திருச்சபையின் தலைமையில் நிறுவப்பட்டது. 1978 இல் இப்பள்ளி மூடப்பட்டது.
கனடாவின் குடியிருப்புப் பள்ளிகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பழங்குடி சிறுவர்களை வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் அரசாங்கமும் மற்றும் மதவாதிகள் நடத்தும் கட்டாய உறைவிடப் பள்ளிகளாக இருந்தன.
இங்கு தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் உரிய வசதிகள் இன்றி மோசமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், சுதேச கலாசாரம், மொழி ஆகியவற்றைப் பின்பற்றுவதில் இருந்து வெளியேற அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டனர். இது ஒரு இன அழிப்பு என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இங்கு குறைந்த இடவசதிகளில் அதிகளவு மாணவர்கள் தங்கவைக்கப்பட்ட நிலையில் பலர் தட்டம்மை, காசநோய், காய்ச்சல் மற்றும் பிற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் பள்ளி ஆவணக் குறிப்புக்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்தக் குடியிருப்புப் பள்ளி புதைகுழி விவகாரம் கனடாவில் மிகப் பெரும் சா்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இதேவேளை, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 94 பரிந்துரைகளை முன்வைத்தது.
கனடாவின் குடியிருப்பு பள்ளி முறைமையில் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளில் கத்தோலிக்க தேவாலயங்கள் கொண்டிருந்த பங்கிற்காக உலக கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் மன்னிப்புக் கோர வேண்டும் என்பதும் அந்தப் பரிந்துரைகளில் ஒன்றாகும்.
இந்நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையை பரிசீலிக்குமாறு கனடா அரசாங்கம் போப்பாண்டவரிடம் கடந்த 2007-ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்தது.
இதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை ஏற்றுக்கொள்வதாக 2008 ஆம் ஆண்டு கனேடிய ஆயா்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. எனினும் குடியிருப்புப் பள்ளி விவகாரதில் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் ஆயர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றுவரை பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு கத்தோலிக்க தலைவர் மன்னிப்புக் கோரவில்லை என்பது வெட்கக்கேடானது என தான் கருதுவதாக கனேடிய சுதேச சேவைகள் விவகார அமைச்சர் மார்க் மில்லர் கூறினார்.
இவ்வாறான ஒரு நெருக்கடி மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் கனடாவின் குடியிருப்பு பள்ளி முறைமையில் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளில் கத்தோலிக்க தேவாலயங்கள் கொண்டிருந்த பங்கிற்காக முறையாக மன்னிப்புக் கோர வேண்டும் என உலக கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸிடம் கனடா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.