எதிர்பார்த்ததை விட அதிக பயணிகளை ஈர்த்துவரும் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கூடத்தை ரூ. 200 மில்லியன் செலவில் மேம்படுத்த இலங்கை துறைமுக, கப்பல், விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் மற்றும் சர்வதேச பயணிகளின் பயணத் தேவைகளை நிறைவேற்றும் முக்கிய கடவையாக பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது விளங்குகின்றது. முக்கியமாக சென்னை – பலாலி விமானநிலையங்களிடையே இதுவரை 200 பறப்புகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டது. இது பலாலி விமானநிலையத்தின் முக்கியத்துவத்தையும் செயற்திறனையுமே காட்டுகிறது.
அக்டோபர் 16 அன்று அமைச்சர் டி சில்வா விமான நிலையத்துக்கு விசேட வருகை தந்தபோது அங்கு பயணிகளின் சுறுசுறுப்பான போக்கும் வரவும் அவரது கவனத்தை ஈர்த்திருந்தது எனவும் இதைப் பார்த்த அமைச்சர் நிலையத்தின் பயணிகள் கூடத்தின் மேம்பாட்டுக்காக உத்தரவிட்டார் எனவும் கூறப்படுகிறது.
எதிர்வரும் காலத்தில் இவ்விமான நிலையம் மேலதிக பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விமான நிலையத்தின் போக்கு மற்றும் வரவு முனையங்களில் பாரிய முன்னேற்றங்களைச் செய்யவேண்டுமென அமைச்சர் டி சில்வா கருத்துத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே உள்ள பயணிகள் முனையங்களை விரிவாக்கி பல்கிப் பெருகும் உல்லாசப் பயணிகளின் வசதிகளை முன்னிட்டு தீர்வையற்ற வியாபார நிலையங்கள், மலசலகூடங்கள், குடிவரவு, குடியகல்வு, சுங்க திணைக்களங்கள் அலுவலகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நவீன முறையிலான பயணி முனையங்களை உருவாக்க சுமார் ரூ.200 மில்லியன்கள் வரை தேவைப்படுமென இதற்காக அமர்த்தப்பட்ட தனியார் நிறுவனமொன்று கூறியிருக்கிறது.
சர்வதேச விமான நிலையமாக இருப்பினும் தற்போது இந்தியாவின் அலயன்ஸ் எயர் நிறுவனம் மட்டுமே சென்னைக்கும் பலாலிக்குமிடையில் விமான சேவைகளை வழங்கி வருகிறது. ஒரு பறப்பில் 60 பயணிகளைத் தாங்கிக்கொண்டு தினமும் இச்சேவை நடைபெற்று வருகிறது. இதை விடவும் இன்டிகோ நிறுவனமும் சென்னை – பலாலி விமான சேவையை ஆரம்பிக்க உத்தேசித்து வருகிறது.
இத்துடன் உள்ளூர் விமான சேவை நிறுவனங்களான டிபி ஏவியேஷன் மற்றும் சினமன் எயர் ஆகியன ரத்மலான, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையங்களிலிருந்து பலாலிக்கு வாராவாரம் பறப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. இவ்விரு விமான நிறுவனங்களிடமும் தலா நான்கு விமானங்கள் இருக்கின்றன. இவற்றிந் மூலம் பல சர்வதேச பயணிகள் வடக்குக்கு சுற்றுலா வருகின்றனர்.
தற்போதுள்ள விமான ஓடுபாதை முழுமையான சர்வதேச நிலையங்களுக்குரிய தகமையை எட்டவில்லை எனவும் கூறப்படுகிறது. தற்போது ஏற்கெனவே மறுசீரமைக்கப்பட்ட 950 மீட்டர் ஓடுபாதையை 2300 மீட்டர் நீளம் 45 மீட்டர் அகலத்துக்கு மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளது. பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு மேம்பாடடைந்ததும் அங்கு தமது சேவைகளை விரிவாக்க மேலும் பல இந்திய விமான சேவை நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.