Reading Time: < 1 minute

உலகில் பணி ஓய்வுக்கு பின்னர் குடியேறத்தகுந்த 50 நாடுகளில் கனடாவும் ஒன்று என ஐரோப்பிய நிறுவனம் ஒன்று தங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த ஆய்வறிக்கையில், விலைவாசி உயர்வு, வாழ்க்கைத் தரம், விசா பெறுவதில் சிக்கலின்மை, பொழுதுபோக்குக்கான கட்டணங்கள், வாடகை, காலநிலை, சுகாதார மேம்பாடு, விருந்தோம்பல், மொழி சிக்கல் உட்பட பல காரணிகளை மொத்தமாக ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே அந்த 50 பகுதிகளை தெரிவு செய்துள்ளனர்.

இந்த பட்டியலில் கனடா 22வது இடத்தில் தெரிவாகியுள்ளது. எளிதான விசா நடைமுறைகள், குடியிருப்பு அனுமதி பெறுவதில் சிக்கலற்ற விதிமுறைகள் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரம் என கனடா தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், விலைவாசி உயர்வு காரணமாக முதல் பத்து இடத்தில் மட்டுமல்ல முதல் 20 நாடுகளின் பட்டியலிலும் கனடா இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

குறித்த 50 நாடுகளின் பட்டியலில் ஸ்லோவேனியா முதலிடத்தில் உள்ளது. விலைவாசி மிகவும் குறைவு எனவும் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரம், விசா பெறுவதில் சிக்கலின்மை உள்ளிட்ட பல காரணிகள் கூறப்படுகிறது.

இரண்டாமிடத்தில் போர்த்துகல் மற்றும் மூன்றாமிடத்தில் எஸ்டோனியா உள்ளது. ஆனால் இந்த 50 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.