நாட்டில் நிலவி வரும் பணவீக்க நிலைமைகளினால் சில கனேடியர்கள் உணவு வேளைகளை தவிர்த்து வருவதாக முன்னணி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பணவீக்கம் வாடிக்கையாளர்களை வெகுவாக பாதித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக சில கனேடியர்கள் செலவு குறைப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயணங்களை வரையறுத்துக் கொள்ளல், மலிவு விற்பனை அல்லது விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படும் மளிகை கடைகளில் கொள்வனவு செய்தல், உணவு வேளைகளை தவிர்த்தல் என பல வழிமுறைகளை பின்பற்றி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு எவ்வாறு தங்களது வாழ்க்கையை பாதிக்கின்றது என்பது குறித்த கேள்விகளுக்கு சிலர் மின்னஞ்சல் மூலம் தங்களது பதில்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டில் 85 டொலர்களில் தங்களது மளிகைத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்ட பெண் ஒருவரினால் தற்பொழுது அரைவாசி பொருட்களையேனும் கொள்வனவு செய்ய முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலர் காலை உணவை தவிர்த்து வருவதாகவும், குளிர் நேரங்களில் வீட்டை வெப்பமாக்காது ஸ்வெட்டர்களை அணிந்து வருவதாகவும் சிலர் தங்களது செலவு குறைப்பு அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
கனேடியர்கள் தங்களது உணவுக் கொள்வனவில் 23.6 வீதத்தை குறைத்துக் கொண்டுள்ளதாக கனடாவின் டால்ஹயுஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.