Reading Time: < 1 minute

நோர்த் யோர்க் பூங்காவில் நஞ்சூட்டப்பட்ட நிலக்கடலைப் பாகு (பீநட் பட்டர்) உட்கொண்ட சில விலங்கினங்கள் உயிரிழந்துள்ள நிலையில், அது குறித்து ரொரன்ரோ காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Don Valley Parkway மற்றும் York Mills வீதிப் பகுதியில், Cassandra Boulevardற்கு அப்பால் உள்ள நகரான்மை குடியிருப்பு வீடுகளுக்கு பின்புறமாக உள்ள பூங்காப்பகுதியில் சில காட்டு விலங்குகள் உயிரிழந்து கிடப்பதாக நேற்று அதிகாலை 2 மணியளவில் தமக்கு தகவல் கிடைத்ததாகவும், அங்கு சென்று ஆய்வு செய்தவகையில், அங்கே குழந்தைகள் மற்றும் மிருகங்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் ஏதோவொரு நச்சுப்பொருள் இருப்பதாக அஞ்சுவதாகவும், அந்த நஞ்சு “பீநட் படடர்” உடன் கலந்திருக்கக்கூடும் என்று நம்புவதாகவும் காவல்துறையினர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அண்மைய நாட்களில் குறித்த அந்த பூங்காவுக்கு சென்றிருந்தால், அதன்பின்னர் உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ, செல்லப் பிராணிகளுக்கோ வித்தியாசமான அறிகுறிகள் அல்லது உடல் உபாதைகள் காணப்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரைச் சந்திக்குமாறும் விசாரணை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களையோ செயற்பாடுகளையோ யாராவது அவதானித்திருந்தால், தம்மை 416-808-3300 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.