Reading Time: < 1 minute

நேட்டோ புத்தாக்க நிதியத்தில் (NATO Innovation Fund) கனடா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக கனடிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்விண்டி அறிவித்துள்ளார்.

Tamil Business Directory

இதன்மூலம், இந்த நிதியத்தில் இணைந்த 25ஆவது கூட்டாளி நாடாகவும், வட அமெரிக்காவிலிருந்து இணைந்த முதலாவது நாடாகவும் கனடா திகழ்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் கனடா 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை வழங்கவுள்ளது. இதன் மூலம் கனடிய புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒரு பில்லியன் யூரோவுக்கும் அதிகமான முதலீட்டு மூலதனத்தை அணுகுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

கனடிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி, சர்வதேச சந்தை வாய்ப்புகள் மற்றும் நாட்டின் பாதுகாப்புத் திறன் ஆகியவற்றை மேம்படுத்த இந்தக் கூட்டாண்மை உதவும் என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை கனடாவின் இறையாண்மையையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ புத்தாக்க நிதியம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, ஆற்றல் மற்றும் அதிநவீன தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்தக் கூட்டாண்மை கனடிய தொழில்முனைவோருக்கு புதிய முதலீட்டு மற்றும் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.