கனடாவை சேர்ந்த பெண் சாரா லேண்ட்ரி. இவர் இந்தியா வந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் ருத்ரகன்னியாக துறவறம் பெற்றார். பின்னர் நித்தியானந்தாவால் ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்ப பிரியானந்தா என பெயர் சூட்டப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் பிரியானந்தா வெளியிட்ட காணொளியில், நித்தியானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
அதில், “கடந்த 2017ஆம் ஆண்டு நித்தியானந்தாவால் திருவனந்தபுரத்தில் உள்ள குருகுலத்திற்கு செல்ல பணிக்கப்பட்டேன். அங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் கணக்கு ஆரம்பித்து அதனை பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொடுக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அங்கு அதிகாலையில் அழுது கொண்டிருந்த இரு சிறுமிகளிடம் விசாரித்த போதுதான் அங்கு நடக்கின்ற கொடுமைகள் எனக்கு தெரியவந்தது.
சிறுவர், சிறுமிகள் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டுள்ள அந்த குருகுலத்தில் அதிகாலையில் குச்சியால் அடித்து சிறுவர் சிறுமிகள் வலுக்கட்டாயமாக தூக்கத்தில் இருந்து எழுப்பப்படுகிறார்கள். அவர்களை இயற்கை உபாதைகளை கழிக்ககூட அனுமதிப்பதில்லை. குருகுல ஆசிரியர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போதுதான் அனைவரும் இயற்கை உபாதைகளை கழிக்க செல்ல வேண்டும் என்ற கொடுமையான கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளது. சிறுவர் சிறுமிகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. தனது மகனுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வினோதினி சங்கர் என்பவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளேன்.
இந்த கொடுமைகள் குறித்து நடிகை ரஞ்சிதாவிடம் கூறினேன். அதற்கு அவர் எந்த ஒரு தீர்வும் காணவில்லை.
நித்தியானந்தா என்னை மூளை சலவை செய்து வைத்திருந்தார். அந்த சிறுவர் சிறுமிகளை சந்தித்து வந்தபின்தான் நித்தியானந்தாவிடம் சக்தி இருப்பதாக கூறப்படுவது எல்லாம் பொய் என்பதை உணர்ந்தேன். இதையடுத்து ஆசிரமத்தில் இருந்து வெளியேறி கனடாவுக்கு சென்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளேன்” என்று சாரா தெரிவித்துள்ளார்.