Reading Time: < 1 minute

கனடாவின் வெஸ்டன் வீதி மற்றும் 401 வது அதிவேக வீதிக்கு அருகே ஒரு டாக்ஸி சாரதி, யாரோ ஒருவரைத் தாக்கி விட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றதை சாட்சிகள் சிலர் உறுதிப்படுத்தியதை அடுத்து ரொறெண்ரோ பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

வாகன சாரதி தனது வாகனத்தில் ஏறிச்செல்லும் முன், இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதைக் காட்டும் சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களிலும், இணையங்களிலும் பகிரப்பட்டு வருகின்றது. கைகலப்பின் பின்னர் டாக்ஸி சாரதி மற்றவரை மோதித் தள்ளிவிட்டு வாகனத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியளவில் ஓக் வீதிக்கு அருகிலுள்ள வெஸ்டன் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கைகலப்பு ஏற்படுவதற்கான காரணம் தொடர்பாக விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டாக்ஸி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது மற்றைய நபர் தனது காருக்கு வெளியே இருந்ததாக சாட்சிகள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

அந்த நபர் ஏன் முதலில் வாகனத்திற்கு வெளியே இருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அப்போது 9-1-1 அவசர சேவைக்கு அழைத்தவர்கள் டாக்ஸி ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டதாக கூறினர்.

எவ்வாறாயினும், மற்றைய நபர் காயமடையவில்லை எனவும், சிகிச்சைக்கு மறுத்துவிட்டதாகவும் மருத்துவமனை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.