“இலங்கையைச் சேர்ந்த நான் கனடாவில் வளர்ந்தேன். தமிழக மக்களின் ஆதரவால் இப்போது பிரபலமாகி இருக்கிறேன். இனி தொடர்ந்து தமிழகத்தில் இருக்கவே விருப்பம்” என்று பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட லாஸ்லியா தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி, விஜய் தொலைக்காட்சியில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூன்றாவது பாகம் கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்தது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 100 நாட்களைக் கடந்து ஷெரின், சாண்டி, முகென், லாஸ்லியா ஆகிய 4 பேர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகினர். 6-10-2019 அன்று இதன் வெற்றியாளர் யார் என்பதற்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.
முன்னதாக, இறுதிப் போட்டி நெருங்கி வரும் நேரத்தில், பத்திரிகையாளர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். அப்போது முகின், சாண்டி, லாஸ்லியா, ஷெரீன் ஆகியோர் போட்டியாளர்களாக வீட்டிற்குள் இருந்தனர். அந்தச் சந்திப்பின் போது பத்திரிகையாளர் மத்தியில் பேசிய லாஸ்லியா, “இலங்கையைச் சேர்ந்த நான் கனடாவில் வளர்ந்தேன். புதுமுகமாகத்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தேன். தமிழக மக்களின் ஆதரவால் இப்போது பிரபலமாகி இருக்கிறேன். இனி தொடர்ந்து தமிழகத்தில் இருக்கவே விருப்பம். இங்குள்ள மக்கள், உறவுகள் என் மீது அதிக பாசத்துடன் இருப்பார்கள் என நம்புகிறேன்.
என் அப்பா வீட்டுக்குள் வந்தது, பேசியது பெரிதாகிவிட்டது. அவர் என்ன பேசினாலும், என் அப்பா. எங்களுக்குள் எந்த உறவுச் சிக்கலும் கிடையாது. என் நன்மைக்காகவே அவர் பேசியுள்ளார். அவரது சமூகம் அவரை எப்படி நடத்தியது? எனத் தெரியவில்லை. அவர் ரொம்ப பாசமாக இருப்பார்.
என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித்தான் காதலித்தோம் எனச் சொல்லிச் சொல்லிதான் எங்களை வளர்த்தார்கள். ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன்தான் என் திருமணம் நடக்கும்” என்று தெரிவித்தார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் கவின் – லாஸ்லியா இருவரும் காதலித்து வந்தனர். அந்தச் சமயத்தில் லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது, லாஸ்லியாவைத் திட்டியது உள்ளிட்ட விவகாரங்கள் இணையத்தில் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.