எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கனேடிய பொதுத் தேர்தல் இடம்பெறுவதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த அந்தக் காலப்பகுதியில் யூதர்களுடைய விடுமுறை வருவதனால், தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து கனேடிய தேர்தல் தலைமை அதிகாரி பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய மத்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்ற நிலையில், குறித்த அந்த ஒக்டோபர் 21ஆம் திகதி யூதர்களுடைய முக்கிய விடுமுறை நாளும் வருகிறது. குறித்த அந்த நாளில் யூதர்கள் வேலைசெய்வதோ, வாக்களிப்பதோ இல்லை என்ற நிலையில், தேர்தல் நாள் குறித்த இநத குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணை ஒன்றினை அடுத்து, தேர்தல் திகதியை மாற்றியமைக்குமாறு மத்திய நீதிமன்றம் ஒன்று தேர்தல் தலைமை அதிகாரியைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் தேர்தல் திகதி குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் மட்டுமே தேர்தல் தலைமை அதிகாரிக்கு உள்ளதாகவும், தேர்தல் திகதியை தனித்து மாற்றியமைக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி, இந்த மத்திய பொதுத் தேர்தலில் அனைத்துக் கனேடியர்களும் வாக்களிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் பொறுப்பு தமக்கு உள்ளதாகவும், நிதிமனற் கட்டளைக்கு ஏற்றவாறு கனேடிய தேர்தல் திணைக்களம் தனது முடிவினை விரைவில் அறிவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.