Reading Time: < 1 minute

நாம் பருகும் தேநீரில் பில்லியன் கணக்கான நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் இருக்கும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது.

கனடிய ஆராய்ச்சியாளர்கள் சில பிளாஸ்ரிக் தேநீர் பைகளில் இருந்து அதிக அளவு நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் தேநீரில் கலப்பதனைக் கண்டறிந்துள்ளனர்.

மேலும் நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் பரவலாக சுற்றுச்சூழலிலும், குழாய் நீர், போத்தல் நீர் மற்றும் சில உணவுகளிலும் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பு (WHO) இது குறித்துக் கூறுகையில்; குடிநீரில் இதுபோன்ற துகள்கள் ஆபத்தை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்டுபிடிப்புகள்  வரையறுக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும் மேலும் இது குறித்து மேலதிக ஆராய்ச்சி செய்யப்படவேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துத்துள்ளது.

கனடாவின் மொன்றியலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தைச் (McGill University) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த விடயம் தொடர்பாக மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன் எந்த வகையான நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் உடல்நல பாதிப்புக்களை  ஏற்படுத்துகின்றன என்பது வரையறுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலான தேயிலைப் பைகள் காகிதத்தில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் சில உயர்ரகத் தேயிலைப் பைகள் ஒருவகைப் பிளாஸ்ரிக் துணியில் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.