பிரிட்டிஷ் கொலம்பியாவில் சமயோசித முடிவால் இருவரை ஆற்று வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய 5 நண்பர்களை கனேடிய பொலிசார் கெளரவித்துள்ளனர்.
தொடர்புடைய சம்பவம் கடந்த மாதம் மேப்பிள் ரிட்ஜில் உள்ள கோல்டன் இயர்ஸ் மாகாண பூங்காவில் நடந்துள்ளது. Surrey பகுதியை சேர்ந்த 5 நண்பர்கள் மலையேறும் விதமாக மெட்ரோ வான்கூவர் பூங்காவுக்கு சென்றுள்ளனர்.
அப்போது ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் வகையில் இருவர் தத்தளித்தபடி இருப்பதை குறித்த நண்பர்கள் கண்டறிந்துள்ளனர். கடும் குளிரால் அந்த இருவரும் பாதிக்கப்பட்டிருந்துள்ளனர்.
மீட்புக்குழுவினரை அழைக்க முடியாத சூழல், அங்கே மொபைல் சேவைகள் பயன்படுத்தவும் முடியாமல் போயுள்ளது. அப்போது சமயோசிதமாக முடிவெடுத்த நண்பர்கள் ஐவர், சீக்கியர்களான தங்கள் நண்பர்கள் மூவரின் தலைப்பாகைகளை இந்த மீட்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மூவரின் தலைப்பாகையை கயிறாக திரித்து, அந்த இளைஞர்கள் இருவரையும் போராட்டத்திற்கு பிறகு காப்பாற்றியுள்ளனர். பொதுவாக குறிப்பிட்ட பகுதியில் சிக்கிப்போனவர்களை சடலமாக மீட்பதே வாடிக்கையாக இருந்து வந்தது எனக் கூறும் பொலிசார்,
ஆனால் இளைஞர்கள் ஐவரும் துணிச்சலாக செயல்பட்டு, தங்கள் தலைப்பாகையால் இரு உயிர்களை காப்பாற்றியுள்ளது, உண்மையில் வரலாற்றுச்சிறப்பு மிக்க செயல் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஐந்து இந்திய இளைஞர்களின் செயல்களை பாராட்டி கனேடிய பொலிசார் கெளரவித்துள்ளனர். இதில் துணிச்சலாக செயல்பட்ட 21 வயது Gurpreet Singh தெரிவிக்கையில், வாழ்க்கையில் எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கெளரவம் இதுவென தெரிவித்துள்ளார்.