Reading Time: < 1 minute

விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு விமான ஊழியர்கள் தண்ணீர் தர மறுத்தாக வெளியான செய்தி குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஹமில்ட்டனிலிருந்து லொஸ் ஏஞ்சல்சுக்கு செல்லும் விமானம் ஒன்றில் பயணித்த Wayne Fernandes, தாகமாக இருக்கவே பணிப்பெண் ஒருவரிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.

தண்ணீருக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என விமான ஊழியர்கள் கூற, கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு செய்திருக்கிறார் Wayne. ஆனால் தாகத்தை தணிக்க வேண்டுமே என்ன செய்வது என யோசித்த அவர், விமான பணிப்பெண்ணிடம் தனக்கு ஒரு கப் ஐஸ் கட்டிகள் தருமாறு கேட்டுள்ளார் (அதற்கு கட்டணம் கிடையாது).

குறித்த ஐஸ் கட்டிகள் உருகும் வரை காத்திருந்த Wayne, அந்த தண்ணீரையே குடித்து சமாளித்திருக்கிறார்.

தான் பயணம் செய்வது ஒரு குறைந்த கட்டண விமானம் என்பது தனக்கு தெரியும் என கூறும் அவர், உணவு போன்ற விடயங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதுதான், அதற்காக தண்ணீரிற்கும் கட்டணம் செலுத்தச் சொன்னால் எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் அதுகுறித்து இணையவாசிகள் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.